இந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.அம்மை போன்ற பல நோய்கள் உலகநாடுகள் பலவற்றிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.
மருத்துவத்துறையில் இன்னும் வளரவேண்டிய முக்கியமான துறை மூளைநரம்பியல் துறையாகும். பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) ஆகியவை தற்போது மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன.
அல்சீமர் நோய் என்பது ஞாபக மறதிநோய் ஆகும்.இது பெரும்பாலும் முதுமையில் வரும். ஆயினும் இதில் முதுமையில் வருவது,முதுமைக்குமுன் வருவது என்று இரண்டு வகைகள் உள்ளன. முதுமைக்கு முன் இந்த நோயாளிகளில் தூக்கம் வராமை(Insomnia) பெரும்பாலும் முதலில் ஏற்படும். பிற்பாடு இரவில் மன உளைச்சல்,குழப்பம் ஆகியவை உண்டாகும். முடிவெடுத்தல், பிரச்சினைகளை அலசுதல் ஆகியவற்றில் குறைபாடுகள் முதலில் ஆரம்பிக்கும். சற்றுமுன் நடந்தவைகள் மறந்து போதலில் ஆரம்பித்து நோய் தீவிரத்தின்போது எங்கு இருக்கிறோம், காலையா?மாலையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.
பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு முதலில் கைகளில் சிறு நடுக்கமாக ஆரம்பித்து பின் கால் உடல் என்று அனைத்துப்பாகங்களிலும் நடுக்கம் பரவும். முதலில் வலது அல்லது இடது கையில் ஏற்படும் நடுக்கம் அதிகமாக ஏதாவது ஒருகையில் இருக்கும்.சில வருடங்களில் அடுத்த கையிலும் தெரிய ஆரம்பிக்கும். வலது கையில் வரும்போது ஒருவருடைய கையெழுத்து அழகு குறைந்து கிறுக்கலாக மாற ஆரம்பிக்கும்.
இன்னும் இந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.மருந்துகளால் நாம் இவற்றைக் கட்டுக்குள்தான் வைத்திருக்கமுடியும்.
அனைத்து நரம்பு நோய்களும் தொண்டை,குரல் வளை ஆகியவற்றைத்தாக்கும்.ஏனெனில் இந்தப் பகுதி மிக அதிகமான தசைகளைக்கொண்டது. அதே போல் நரம்புநோய்களில் சாதாரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவு அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.இவற்றில் மூளையில் உள்ள மொழி,இசை ஆகியவற்றின் நரம்புப் பாதைகள் மிகவும் சிக்கலானவை. நரம்பு நோய் தாக்கப் பட்டவர்களின் குரல் சத்தம் குறைதல்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை அவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.
இத்தகைய நரம்பு நோய்களுக்கு தற்போது இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் வியாதியில் நடுக்கம், ஆட்களைக்கண்டால் மிக அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும். இதனால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்லவோ, நண்பர்,உறவினர்களைச் சந்திக்கவோ விரும்பமாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள். இசைப்பயிற்சியை ஆரம்பித்த பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் சிரத்தையான பயிற்சி மூலம் இசை நிகழ்ச்சி நடத்தும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். பாடுவது மிகச்சிறந்த குரல் வளைப் பயிற்சியாக உள்ளதால் இது அவர்களின் பாதிப்படைந்த குரலை சீர் செய்துள்ளது. மேலும் உற்சாகத்துடன் பிறருடன் சேர்ந்துபாடுவது அவகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பாடுவது நுரையீரல்களுக்கு மிகச்சிறந்த விரிந்து சுருங்கும் திறனை அளிக்கின்றது.மேலும் சங்கீதம் கற்பதால் மூளையில் புதிய பாதைகள்,நரம்பு இணைப்புகள் உருவாகின்றன. ஸ்ட்ரோக்கால் கைகால் செயலிழந்தவர்கள் பியானோ,மிருதங்கம்,மேளம்,டிரம்ஸ் ஆகியவை கற்பதன்மூலம் விரைவில் நலம் கிடைக்கும்.
இப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையால் பார்கின்சனை குணப்படுத்தமுடியாது. ஆனால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளியை பயிற்சியின் மூலம் எல்லோருடனும் பழகவும்,தன்னம்பிக்கை அளிக்கவும் முடியும். வாழ்வில் நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இதுவே பெரிய விசயம்தான்.
நீங்களோ, நானோ இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தால் கட்டாயம் நோபல் பரிசுதான்.
என்னுடைய ஆண்கள் அமுதூட்டமுடியுமா? இடுகை யூத்விகடனில் வந்துள்ளது.யூத்விகடனுக்கு நன்றி.
தலையணை மந்திரங்கள் 16 க்கு தமிலிஷில் 26 ஓட்டுக்களும் 618 ஹிட்டும் அளித்துள்ளீர்கள். நல்ல பதிவுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு மீண்டும் நல்ல இடுகைகளை எழுதத் தூண்டுகிறது.( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை! இஃகி! இஃகி! இஃகி..)
இந்த செய்திகளை அனைவரும் படிக்க தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டுப்போடவும்!!