காலையில் கவிதை, இல்லாவிட்டால்
வேறு ஏதாவது எழுதுவது என்று
உக்காந்தேன்!நான் பேப்பரில் எழுதுவது
இல்லை!நேரே பிளாகில்தான் எழுதுவேன்!
இந்த நேரத்தில்,ஜாலியா எழுத முடியல.
பின் வரும் கவிதையை,நிறைய இடத்தில்
அழுது கொண்டே எழுதினேங்க!
ஒரு சிறு குழந்தையின் பார்வையில்....
அதிரும் வெடியின்
ஒலியில்
நகரும் வண்டிகளின்
கரகரக்கும் மண் அரையும்
சத்தத்தில்!!
இடிந்து கொட்டும் செங்கல்
மண் குவியலில்
அமைதியாய் நான்!!
ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!
எரியும் தீயின் வெம்மை
அறியாது
வெந்து போன என்
இதயம்!!
யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!
கல் தரையும்,
காய்ந்து ஓய்ந்த
கண்ணீரும் போதும்
நான் உறங்க!!
மண்ணும்,கல்லும்,
இரத்தமும்,சதையும்
ஒன்றாய்,
பயமில்லை எனக்கு!
பாதையில் என்னை
இழுத்து எறிந்தாலும்
வலிக்கவில்லை
எனக்கு!!
லண்டன் சித்தப்பா
அனுப்பிய
கரடி பொம்மையும்,
கனடா மாமா
அனுப்பிய ஏரோப்ப்ளேனும்
எங்கே?
யாராவது பார்த்தீர்களா?
அப்பா சொன்னார்
நான் படித்து
ஏரோப்பிளேனில்
வெளிநாடு போவேனாம்!
அப்பா,அம்மாவையும்
கூட்டித்தான் போவேன்!
அம்மா சொன்னா
நாளை
படகில் வேற வீட்டுக்கு
போகலாம் என்று!
பள்ளிக்கூடம்
எப்பத் திறப்பாங்க!
போய் ரொம்ப நாளாச்சு!
பள்ளிப்பையையும்
காணோம்!!
புத்தகங்களும் காணோம்!
யாராவது பாத்தீங்களா?
ஏரோப்ப்ளேனும்,
படகும்
எங்கே வரும்?
நானும்,அம்மாவும்,
அப்பாவும் போகணும்!
அம்மா சொல்லியிருக்காங்க!
பசிச்சா அழுகக்கூடாதுன்னு!
மாமாவும்,
சித்தப்பாவும்
எனக்கு பிஸ்கட்,
சாக்லேட் எல்லாம்
வாங்கி வருவாங்களாம்!
சித்தப்பாவும்,
மாமாவும் இன்னும்
வரவேயில்லை!
யாருக்கும் சொல்லதீங்க!
ஒரு காகிதக் கப்பல்
செஞ்சு
ஒளிச்சு வைச்சிருக்கேன்!
அதுல
அம்மா,அப்பா
நான் எல்லாம்
போயிருவோம்.
சரி என்
அம்மா,அப்பாவை
பார்த்தீர்களா?
ஏன் இன்னும்
வரவில்லை அவுங்க!
அவங்களை
விட்டு
எவ்வளவு நேரம்
தனியா இருப்பேன் நான்?
எனக்கு
அழுகையா வருது!
ஆனாலும்
அம்மா சொல்லியிருக்காங்க
அழுகக் கூடாதுன்னு!
என் அம்மாவையும்,
அப்பாவையும்
யாராவது
பார்த்தா சொல்லுங்களேன்!!
Tuesday, 27 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment