ஒவ்வொரு முறையும்
இவர்கள் என்னைக்
கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!
இவர்கள் வர்ணம் பூசிய
என் கனவுகளைக்
கடைகளில் விற்பவர்கள்!
தலைப்போ,
கருவோ,
அவர்களின் விருப்பங்கள்-
மேசையெங்கும்
சிதறிக்கிடக்கின்றன!
என் பசிக்கான உணவு
நானிருக்கும் அறை,
அமர்ந்திருக்கும் நாற்காலி
எல்லாம் அவர்களே
தீர்மானிக்கிறார்கள்!
ஒத்துப்போகா சொற்களை
வலியப் புணரச்செய்து
எழுதப் படும்
ஒவ்வொரு வரியும்
அவர்களுக்காகவே
எழுதப்பட்டது!!
அங்கும் இங்கும்
திருத்தங்கள் சொல்லி
என் கவிதையில்
அவர்களின் முகங்களைத்
திணித்தார்கள்!!
ஒவ்வொரு முறையும்
அவர்களின்
கருத்துக்களுக்கு
நான் சேர்த்த வசீகரமான
சொற்கள் வலிமிகுந்த
ஒரு குறைப்பிரசவமாகவே
முடிகின்றன..
ஆயினும் அவர்களுக்கான
என் படைப்பை
உச்சிமோந்து
கொண்டாடுகிறார்கள்!
எழுதி முடித்த
பக்கங்களில் தேடுகிறேன்,
என் கவிதையும் நானும்
அங்கு இல்லை!
கொஞ்சம் பொறுங்கள்!!
அவர்கள் வருகிறார்கள்
நான் கவிதை எழுதவேண்டும்.
No comments:
Post a Comment