Friday 29 May 2009

ஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா?

மாறி வரும் அறிவியல் உலகம் ஆண் பெண் பாகுபாடுகளில் அதீத புரட்சிகளை செய்து வருகிறது. பெண்கள் தாங்கள் மட்டும் ஏன் குழந்தையைச் சுமக்கிறோம்? ஆண்களுக்கு சாதகமாக கடவுள் செயல்பட்டு விட்டார் என்று அலுத்துக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.

ஆண்கள் குழந்தைக்குப் பாலூட்ட முடியுமா? இந்த சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்காது.

அறிவியல் ரீதியாகப்பார்ப்போமா இதை. பால் சுரப்பதற்கு

1.மார்பகங்கள் தேவை. அந்த மார்பகங்களில் பால் சுரப்பிகள்(Mammary glands), சுரந்த பாலை கொண்டு செல்லும் குழாய்கள்(feeding ducts), மார்புக்காம்பு(Nipple) ஆகியவை தேவை. இவை பெண்களுக்கு முழு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.

2.பிட்யூட்டரி சுரப்பி(pituitary gland) இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் பாலை சுரக்கத்தூண்டுகிறது. இதுவும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கிறது.

பாலூட்டவேண்டுமென்றால் மார்பகங்களுக்குத் தூண்டுதல் தேவை. பெண்களுக்கு இது கர்ப்பத்தின் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி தூண்டப்படும்போது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ப்ரொலாக்டின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்கிறது. அவைதான் மார்பகத்தில் பாலூறும் செயல்களை கவனிக்கின்றன.

ஆண்களுக்கு ப்ரொலாக்டின் குறைந்த அளவே சுரக்கும். உடல் உறவின் போது இவை வெளியிடப்படும் இவை திருப்தியையும், உடல் ரிலாக்ஸான நிலையையும் ஏற்படுத்துகின்றன.

ஆண்கள் பாலூட்டுவதுபற்றி நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளன.

1896 க்கு முன்பே கடல் மாலுமி குழந்தையின் தாயைப் பிரிந்த தன் குழந்தைக்கு பாலூட்டியதாகவும், ஒரு தென் அமெரிக்க உழவர் தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தபோது பாலூட்டியதாகவும், சிப்பீவா(Chippewa) என்ற அமெரிக்க பழங்குடியின ஆண் தாய் இறந்த தன் குழந்தைக்கு குறைவில்லாமல் பாலூட்டியதாகவும் வரலாற்றில் காணப்படுகிறது.

 

மேலேயுள்ள படத்தில் உள்ள விஜெரட்னே (2002ல்)என்ற இலங்கைப் பிரஜை தன் மனைவி இறந்தவுடன் தன் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். குழந்தைக்கு பால் மாவு ஒத்துக்கொள்ளாததால் வேறுவழியின்றி தன் மார்பைக் குழந்தை தேடியபோது கொடுத்ததாகவும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பால் சுரந்ததாகவும் கூறியுள்ளார்.

குழந்தையில்லாத பெண்கள் பலர் தத்தெடுத்த குழந்தைகளுக்கு திடீரென பாலூட்ட இயலும் சம்பவங்களுக்கும் இதுதான் காரணம்.

எல்லா ஆண்களுக்கும் ப்ரொலாக்டின் குறைந்த அளவே இருக்கும். அதீத தேவைகளில் மூளை இதனை அதிகம் சுரக்க வைக்கும்.

எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!

 

பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டிடவும்!!

No comments:

Post a Comment