Wednesday 25 March 2009

நம்ம ஊரு ஆளுங்க திருந்தமாட்டாங்கப்பா!

 

 

 ருக்கையிலிருந்து மெதுவாக  எழுந்து உடலை வளைத்து நெட்டி முறித்தேன். வயதாகிக்கொண்டே போகிறதல்லவா!

வயதாகிக்கொண்டே போகிறதா? அப்படித்தான் நண்பர்கள் பேசும்போது  சொல்லிக்கொள்வோம்.

உடலுக்குத்தான் வயசாகிக்கொண்டு போகிறது! உள்ளம் இன்னும் இளமை மாறாமல் அப்படியே கல்லூரி விடுதி வராண்டாக்களில்தானே சுத்திக்கொண்டு உள்ளது!

உணர்வுகளுக்கும் வயசாகவில்லை! கோபம் வருவதெல்லாம் குறையவில்லை

உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது! ஒரு மாதிரி ஆகி விடும்!! நானே ஒரு மாதிரியோ? என்று கூட எண்ணியிருக்கிறேன்!

”இங்கிதம் தெரியாதவர்கள்!! இப்பத்தான் பார்க்கிறான், அதற்குள் வயசு என்னன்னு கேக்கிறான்! அடுத்து சம்பளம் என்னன்னு கேப்பான்! 

நம்ம ஊர் ஆளுங்க திருந்த மாட்டனுங்கப்பா”  என்று வீட்டில் கோபமாக பேசிக்கொண்டிருப்பேன்!

இப்படித்தான் ஒருமுறை பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.

பெரும்பாலும் பஸ்ஸில் ஏறினால் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது யோசித்துக் கொண்டு இருப்பேன்! பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவது அரிது!

அன்றும் அப்படித்தான்! கையில் காலச்சுவடு புத்தகத்துடன் கிடைத்த சீட்டில் அமர்ந்தேன்.

பக்கத்தில் இன்முகத்துடன் நடுத்தர வயதுக்கார ஆசாமி ! மெதுவாகத்திரும்பிப் பார்த்தேன்! மாநிறம்,கண்ணாடி அணிந்து இருந்தார்.

இவனைப் பார்த்தவுடன் ஒரு புன்முறுவல்! சிலரைப் பார்த்தால் ரொம்ப தெரிந்த மாதிரி இருக்குமே!.... அதே மாதிரி இருந்தது அவர் முகம்!

நானும் சற்று சிரித்தமாதிரியும், சிரிக்காதமாதிரியும் ஒரு பார்வை விட்டேன்!

”சார்! காரைக்குடி போறீங்களா?”

அவர்தான்!!

”ஆமா!”

”புஸ்தகம் கொஞ்சம் பார்க்கவா?”

”இந்தாங்க பாருங்க”  காலச்சுவடை அவரிடம் கொடுத்து விட்டு கண்ணை மூடினேன்!!

“சார்!!””

”என்னங்க” என்றேன்!!

”இந்தாங்க புத்தகம் ஒன்னுமே புரியலை!”

”காரைக்குடியில் எங்கே சார் வீடு?”

”செக்காலையில்”என்றேன்!

”அப்படியா? நானும் செக்காலைதான் இரண்டாவது தெரு!”

”ஓஹோ”ஒப்புக்கு தலை ஆட்டினேன்!

”நான் தாலுகா ஆபீஸில் உதவி தாசில்தாரா இருந்து ரிடையர் ஆயிட்டேன்! ஒரு பொண்ணு போஸ்ட் ஆபீஸில் க்ளார்க்கா இருக்கு! பையன் இஞ்சினீயரிங் இரண்டாவது வருடம் படிக்கிறான்!!”

”அப்படியா! ரொம்ப நல்லதுங்க!” ரிடையர்டு உதவி தாசில்தார் சரிதான்!!!ஆள் டீஸண்டாத்தான் பேசுகிறார்!

”சார் கல்யாணம் ஆயிருச்சுங்களா?

என்ன வருணாசிரமம் சார் நீங்க!”

எனக்குப்புரியவில்லை!!

“ வருணாசிரமம் என்றால் என்ன?’ என்றேன்!!

”என்ன சார்! தெரியாத மாதிரி கேக்கிறிங்க? வருணாசிரமம்னா ஜாதிதான்!! என்ன ஜாதின்னு கேட்டா ஒரு மாதிரி இருக்கும்!

வருணாசிரமம் டீஸண்டா இருக்கு பாருங்க!”

எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது!!

‘’சார் ! என்னைய பார்த்தே 10 நிமிசம்தான் ஆகுது! நான் என்ன ஜாதியா இருந்தா உங்களுக்கு என்ன?  ந்ம்ம என்ன பொண்ணெடுத்து பொண்ணு குடுக்கவா போறோம்! ஏன் சார் இப்படி இருக்கீங்க?

நீங்கள்ளாம் எவ்வளவு படிச்சாலும் மாறவே மாட்டீங்களா?””

கோபத்துடன் கேட்டேன்!!

மனிதர் கப்சிப்!!

மெதுவாக எழுந்து கடைசி சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்!

” ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!”

பேருந்தில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது!!

No comments:

Post a Comment