Tuesday, 10 March 2009

இதைத்தடுக்க வழியேயில்லையா?

நிறைய போலிகளை நாம் பார்க்கிறோம். இவற்றில் போலி மருத்துவர்கள் என்பது மிக அதிகமாக எல்லோரும் அறிந்த விசயம்!!

போலி எது என்று கண்டு கொள்ள முடியாமல் போலிகள் தற்போது நிறைய கிளம்பியுள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கம் மக்களை பயமுறுத்தி ஏமாற்றி பணம் பறிப்பதுதான்.

  கொஞ்ச நாட்களுக்கு முன் நான் பணியில் இருந்தபோது ஒரு நபர் பழைய அம்பாசிடர் காரில் வந்தார்.

ஏக தடபுடலாகப் பேசியவர் காரிலிருந்து தன் மகனை இறக்கினார்.பையனுக்கு காரை எலும்பு உடைந்து இருந்தது.. பெரிய டாக்டர் நம்பரை வாங்கி பேசினார்.

தான் பெரிய புள்ளி என்றும் வைத்தியத்தில் கோளாறு ஏற்பட்டால் அவ்வளவுதான் என்று இருப்பவர்களை பயமுறுத்தினார்.

உடனே அட்மிசன் பண்ண வேண்டும் என்றார். எங்கள் முன்னிலையில் இன்னொருவருக்கு போன் செய்து “ஏப்பா அந்த டாக்டரை விட்டுவிடு!! நீ அவர்கிட்ட போய் காசு எதுவும் வாங்கிவிடாதே!! நான் வந்துவிடுகிறேன். அது பெரிய மேட்டர்! வேற மாதிரி பேசிக்குவோம்”” என்று பேசி விட்டு வந்தார்.

2, 3 டாக்டர்ங்க நம்ம கையில மாட்டிக்கிட்டு இருக்காங்க!! என்று ஏகப்பட்ட பிலிம் காட்டினார்!!

சிகிச்சை முடிந்தவுடன் திடீரென்று உடனே வீட்டுக்குப்போகவேண்டும் என்று பையனைக்கூட்டிக்கொண்டு போய் விட்டார். 

அவருடைய காரில் வட்ட தகரத்தில் இந்திய மேப்பை வரைந்து அதை கலர் பூசி  பொருத்தி இருந்தார்.  பின்னாளில்  தெரிந்தது அவர் ஒரு போலி என்று.

ஆயினும் அந்த நேரத்தில் போலி யார் உண்மை யார் என்று நம்மால் கண்டு பிடிக்க முடிவதில்லை.

”சில நாட்களுக்கு முன் செய்தியில் மதுரை தேனியில் போலி நுகர்வோர் கோர்ட் நடத்தி மனித உரிமை கமிசன் தலைவர் என்று கையெழுத்துப்போட்டு மோசடி செய்த போலி பெண் ஓமியோபதி மருத்துவரை  சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து உள்ளனர்”என்று படித்து இருப்பீர்கள்!!!

இதில் நடந்த கூத்து என்னவென்றால் எல்.ஐ.சி.ஏஜெண்ட் நோபின் என்பவருக்கு மின்சார கட்டணம் அதிகமாக வந்ததாக இவர்களிடம் புகார் தந்து உள்ளார். இவர்கள் அவரிடம் காசு வாங்கிக்கொண்டு நோபினுக்கு நிவாரணம் ஒன்றரை லட்ச ரூபாய் தர போலி உத்தரவு வழங்கி இருக்கிறார்கள். அதில் மனித உரிமை கமிசன் தலைவர் நீதிபதி வென்கடாசலையா என்பதற்கு பதில் சிவசுப்பிரமணியம் என்று கையெழுத்துப்போட்டு இருக்கிறார்கள்.. சந்தேகத்தில் நகலை சென்னைக்கு அனுப்பியதில் சென்னை மனித உரிமை கமிசன் அதிகாரிகளே ஆடிப்போய் விட்டார்கள்!!

இதேபோல் கோவையில் மனித உரிமை ஆணையம் பெயரில் சர்க்யுட் ஹவுசில் தங்கி சரவண கருப்பசாமி என்பவர் ப்ரெஸ்மீட் எல்லாம் நடத்தியுள்ளார். போலியான முகவரி,அடையாள அட்டையெல்லாம் கொடுத்து நிருபர்களை வேறு திட்டியிருக்கிறார்!எவ்வளவு தைரியம் பாருங்க?

இவர்களுக்குத்தேவையெல்லாம் ஒரு பழைய வெள்ளை அம்பாசிடர் கார், அதில் தகரத்தில் வெட்டிய சின்னம், இரண்டு எடுபிடி, விசிட்டிங் கார்டு,லெட்டர் பேடு!!  ரொம்ப ஈசியான தொழிலா தெரியுதேன்னு மக்கள் யாரும் ஆரம்பித்து விட வேண்டாம்.

நாம் கேட்பதெல்லாம் இப்படிப்பட்ட போலிகள் இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்!! போலீசுக்கோ அரசு அதிகாரிகளுக்கோ யார் போலி யார் உண்மை என்று தெரியவில்லை. இவர்கள் ஏமாற்றி சொகுசாக வாழ்வதும், ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும் தொடர்கதைதானா? தடுக்க வழியேயில்லையா?

No comments:

Post a Comment